'டெல்டா கிரான்' என்ற புதிய வகை தொற்று உருவாகவில்லை "ஆய்வகத்தில் ஏற்பட்ட தவறாக இருக்கலாம்" - விஞ்ஞானிகள் கருத்து
மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள சைப்ரஸ் நாட்டில் 'டெல்டாக்ரான்' என்ற புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வெளியான தகவல் ஆய்வகத்தின் தவறாக இருக்கலாம், என பிரபல விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உருமாற்றம் அடைந்த டெல்டா மற்றும் ஒமைக்ரான் வைரஸ்களின் பண்புகளை ஒருங்கே அமைந்த புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதற்கு 'டெல்டாக்ரான்' என பெயரிட்டுள்ளதாகவும் சைப்ரஸ் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறை கூறியிருந்தது.
உலகெங்கும் இது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது ஆய்வகத்தில் நிகழ்ந்த தவறான சோதனையால் வந்த முடிவாக இருக்கலாம் என்றும், அத்தகைய புதிய உருமாற்றமடைந்த தொற்று உருவாகவில்லை என்றும், புகழ்பெற்ற லண்டன் இம்பீரியல் மருத்துவக் கல்லூரியின் வைரஸ் ஆராய்ச்சியாளர் டாம் பீகாக் தெரிவித்துள்ளார்.
இதே கருத்தை கேம்பிரிட்ஜ் நகரில் செயல்படும் வெல்கம் சேங்கர் மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் கொரோனா ஆராய்ச்சி பிரிவின் தலைவரான ஜெஃப்ரி பேரட்டும் (Jeffrey Barrett) தெரிவித்துள்ளார்.
டெல்டா மற்றும் ஒமைக்ரானின் கலவையாக எந்த வைரசும் கண்டறியப்படவில்லை என்று, அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். இதனிடையே, 'டெல்டாக்ரான்' தொடர்பாக பல்வேறு தவறான தகவல்கள் இணையதளங்களில் பரவி வருவதாக கூறப்படுகிறது.
Comments